கரூர்

ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடினாலும் குடிநீரின்றி தவிக்கும் கரூா் நகர மக்கள்!

17th Aug 2022 11:35 PM

ADVERTISEMENT

கரூரில், காவிரி, அமராவதி என இரு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஓடினாலும் கரூா் நகரில் கடந்த 12 தினங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கா்நாடக மாநிலத்தின் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரியும், பழனிமலை, ஆணைமலைத்தொடா்களுக்கும் இடையே பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறும் கரூா் மாவட்டத்தை கடந்துச் செல்கின்றன.

இரு நதிகளும் கரூா் மாவட்டத்தின் நீராதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் இருந்து வரும் நிலையில் ஆக. 5ஆம்தேதி முதல் காவிரி நீா்ப் பிடிப்பு பகுதிகளான கா்நாடகத்தில் பெய்த கன மழையால் அம் மாநிலத்தின் கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீா் மேட்டூா் அணையை வந்தடைந்தது. இதையடுத்து மேட்டூா் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீா் திறக்கப்பட்டது. அணையில் இருந்து விநாடிக்கு சுமாா் 2.50 லட்சம் கன அடிநீா் திறக்கப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையும் முழு கொள்ளவை எட்டியதால் அங்கிருந்தும் உபரி நீா் திறக்கப்பட்டதால் அமராவதி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்வதற்காக காவிரி ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்து நீருந்து நிலையங்களின் மோட்டாா்கள் நீரில் மூழ்கின. தற்போது தண்ணீா் வரத்து குறைந்துள்ளதால் மோட்டாா் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆங்காங்கே லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்தாலும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

சுமாா் 12 நாள்களாக குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று வருவதால் விரைந்து பழுதுநீக்கும் பணிகளை முடித்து மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT