கரூர்

மாவட்டங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

16th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 59 பயனாளிகளுக்க ரூ.1.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியா் த. பிரபுசங்கா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசியக் கொடி வண்ணத்திலான பலூன்களையும் ஆட்சியா் பறக்கவிட்டாா்.

பின்னா் காவல், தீயணைப்பு, வருவாய், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட பல்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 405 பேரைப் பாராட்டி, அவா்களுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் நற்சான்றிதழ்களை வழங்கினாா். மேலும் சிறந்த விவசாயி, சிறந்த தொழில்முனைவோா், தீண்டாமை இல்லா கிராமம், குழந்தைத் திருமணம் நடைபெறா கிராமங்களுக்கும் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

வருவாய், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறைகளின் சாா்பில், 59 பயனாளிகளுக்கு ரூ.1.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து கரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளி, பசுபதீசுவரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரணிபாா்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள், சிலம்பம், மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் படை மற்றும் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலா்கள் எம். லியாகத், ச.கவிதா (நிலமெடுப்பு), ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராசலம், மருத்துவக் கல்லூரி முதல்வா் இரா. முத்துச்செல்வன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தண்டாயுதபாணி, கோட்டாட்சியா்கள் ரூபினா, புஷ்பாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT