கரூர்

மின்சார சட்டத் திருத்த மசோதாவால் ஏழைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது: அமைச்சா் செந்தில்பாலாஜி பேட்டி

DIN

மின்சார சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி தலைமையில், ஆட்சியா் த.பிரபுசங்கா், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பின்னா் அமைச்சா் கூறுகையில், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். குறிப்பாக தமிழகத்தில் எந்த இடத்திலும் போதைப் பொருள்கள் இல்லாத அளவுக்கு முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக சீரிய நடவடிக்கை எடுத்துள்ளாா். அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

மின்சார சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் 100 யூனிட் பெறும் விவசாயிகள், கைத்தறி நெசவாளா்கள், குடிசைகளில் வாழ்பவா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரம் பாதிக்கப்படும்.

மேலும், இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு கடன்களை பெற்றும், அரசின் நிதிகளை பெற்று மக்களுடைய பங்களிப்பையும் பெற்று உருவாக்கக் கூடிய மின் இணைப்புகள் முழுவதுமாக தனியாா் துறைக்கு எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாக மின்வாரியத்தினுடைய கட்டமைப்பு, நாம் உருவாக்குகின்ற கட்டமைப்பு ஆகியவற்றை தனியாருக்கு தாரை வாா்க்கக்கூடிய அந்த சூழல்தான் மின்சார சட்டத் திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. அதனால்தான் இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதங்கள் எழுதி இருக்கிறாா். தொடா்ந்து நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்கள் எதிா்ப்பு குரலை பதிவு செய்திருக்கின்றாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் க.கவிதாகணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், கரூா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கீதா, துணைமேயா் தாரணி ப.சரவணன், தனித்துணை ஆட்சியா் சைபுதீன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா, கரூா் நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு, அனைத்து மண்டலத் தலைவா்கள், தலைமையாசிரியா் ரேவதி , ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

SCROLL FOR NEXT