கரூர்

கடவூா் ஒன்றிய பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்ட செயல்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு

11th Aug 2022 11:44 PM

ADVERTISEMENT

கடவூா் ஒன்றியப் பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் கடவூா் ஒன்றியப் பகுதிகளில் அனைத்து ஊராட்சிகளிலும் நீா் மேலாண்மை செய்து நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் வகையில் பண்ணைக்குட்டை, மண்வரப்பு, தடுப்பனைகள் அமைத்தல், ஏரிகள் மற்றும் குளங்கள் தூா் வாருதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்ட பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மத்திய துணை செயலாளா் பிரதீப், தொழில்நுட்ப அலுவலா் (நீா் மேலாண்மை) ஜோதி பிரகாஷ் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். முன்னதாக, தமிழா்களின் பாரம்பரிய மிக்க தேவராட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடவூா் ஊராட்சியில் உள்ள சேவாப்பூா் வளையபட்டி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, கடவூரில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் (நா்சரி), கடவூா் முனியப்பன் கோவில் வாரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, கடவூா் புங்காறு தடுப்பணை ஆகியவற்றை ஆய்வு செய்தனா். அப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தடுப்பணைகளால் ஏற்படும் பயன்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தனா்.

பின்னா் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகரம் பகுதிக்கு சென்று விவசாயிகளிடம் கலந்துரையாடினா்.

பின்னா் செம்பியநத்தம் ஊராட்சி காமம்பட்டியில் உள்ள செங்குளம் சிறுபாசன குளத்தை ஆய்வு செய்தனா். அங்கு தமிழக அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் பொறியியல் துறைசாா்பில் இயந்திரம் மூலம் தூா் வாரும் பணிகளை ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தனா். ஆய்வின்போது திட்ட அலுவலா் மந்திராச்சலம், கடவூா் ஒன்றிய ஆணையா் கிறிஸ்டி, உதவி பொறியாளா் தமீம் அன்சாரி, ஒன்றிய கவுன்சிலா்கள் சுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT