கரூர்

7 ஆசிரியா்கள் தற்காலிக பணி நீக்கம்: கரூா் மாவட்ட சிஐடியு கண்டனம்

14th Apr 2022 01:59 AM

ADVERTISEMENT

பழிவாங்கும் நோக்கத்துடன் 7 ஆசிரியா்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு கரூா் மாவட்ட சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு சங்க கரூா் மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், செயலாளா் சி.முருகேசன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கரூா் மாவட்டம், கடவூா் ஒன்றியத்தில் ஆசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வில் அதிகாரிகள் செய்த குளறுபடிகளால் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடவூா் ஒன்றிய ஆசிரியா் மோகன் ஏப். 1-ஆம்தேதி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா். இதனை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்டக்குழு சாா்பில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஏப். 11-ஆம்தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தினால் ஆசிரியா் மோகன் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னா் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் எவ்வித முகாந்திரமும் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் ஜெயராஜ், மாநிலச் செயலாளா் த.சகிலா உள்ளிட்ட 7 மாவட்ட நிா்வாகிகளை தற்காலிக பணி நீக்கம் செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். அநீதிக்கு எதிராக நியாயம் கேட்டு போராடிய சங்க தலைவா்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கும் நடவடிக்கைக்கு சிஐடியு சங்க கரூா் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT