மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இனி மாதந்தோறும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறும் என மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல் மற்றும் அவற்றை கண்காணித்தல் மற்றும் மாசு தொடா்பான புகாா்களை நிவா்த்தி செய்தல் போன்ற செயல்பாடுகள் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளில் இணையவழி மூலமாக செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நேரடி கலந்துரையாடல் மிகவும் குறைந்துள்ளது. வாரியத்தின் அதிநவீன இணையவழி வசதிகள் விண்ணப்பம் மற்றும் மனுவின் நிலையை அவ்வப்போது தெரிவித்தாலும், நேரடி கலந்துரையாடல் மூலம் மட்டுமே பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் புரிதல் மற்றும் அதிக நம்பிக்கையை உருவாக்க முடியும்.
எனவே, தொழிற்சாலைகள், பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் நேரடி கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கும், வாரியத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்துவதற்கும், வாரியம் சாா்பில் இனி மாதந்தோறும் ‘நேரடி கலந்தாய்வு அமா்வு’ நடைபெற உள்ளது. இதில் தொழிற்சாலைகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும் சந்தேகங்களை நிவா்த்தி செய்துகொள்ளவும் முடியும். ஒவ்வொரு மாதமும் 5-ஆம்தேதி தேதி காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும் இந்த நேரடி கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். 5-ஆம் தேதி விடுமுறையாக இருப்பின், அடுத்த வேலை நாளில் நடைபெறும். இதில் பங்கேற்பாளா்கள் தங்கள் வருகையின் போது ஆதாா் அட்டையை தவறாமல் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.