கரூா் மாவட்டத்தில் 2,839 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், அதிக பட்சமாக மாநிலம் முழுவதும், ரூ.3,025 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கே மாதங்களில் நிறைவேற்றிக்காட்டியுள்ளாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருந்த விவசாயிகளுக்கு, தமிழக முதல்வா் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
கரூா் மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 2,869 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க இலக்கீடு ஒதுக்கப்பட்டது. கரூா் மாவட்ட மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்களின் துரித நடவடிக்கையால் தற்போதுவரை 2,839 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதுமுள்ள விவசாயிகளுக்கும் ஓரிரு நாள்களில் இலவச மின் இணைப்பு வழங்க தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளாா்.