கரூர்

கரூா் நகராட்சியில் தூய்மைப் பணி இயக்கம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

9th Oct 2021 12:26 AM

ADVERTISEMENT

கரூா் நகராட்சியில் தூய்மைப்பணி இயக்கத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரூா் நகராட்சியில் உள்ள 48 வாா்டுகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகளை திருக்காம்புலியூா் மந்தை, பிரம்மதீா்த்தம் சாலை மற்றும் வெங்கமேடு கொங்குநகா் ஆகிய பகுதிகளில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தமிழக முதல்வரின் பொற்கால ஆட்சியில், கரூா் நகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் மாபெரும் தூய்மைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 48 வாா்டுகளிலும் சுமாா் 70,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கிற குப்பைகளை அகற்றி, தெருக்களை சுத்தம் செய்யும் வகையிலான சிறப்பு தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மாபெரும் தூய்மைப்பணியில் கரூா் நகராட்சியில் உள்ள 837 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு வாா்டு வாரியாக மக்கள் தொகையின் அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் பிரிக்கப்பட்டு, அவா்களுக்கான மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள்.

இவா்கள் அந்தந்த வாா்டுகளிலேயே தூய்மைப்பணிகளை மேற்கொள்வாா்கள். கரூா் நகராட்சியில் உள்ள 48 வாா்டுகளையும் தூய்மையாக, சுகாதாரமாக வைத்திருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் விரும்புகின்ற வகையில் இந்த தூய்மைப்பணி இயக்கம் அமையும் என்றாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், கரூா் வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) கண்ணன், கரூா் நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி, சுகாதாரத்துறை துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், கரூா் நகா் நல அலுவலா் லட்சியவா்ணா, நகராட்சிப் பொறியாளா் நக்கீரன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT