மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியுதவி அளிக்க தொழிலதிபா்கள் முன்வரவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.
கரூா் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபா்கள், இந்திய தொழில் கூட்டமைப்பினா், லையன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள், தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விளக்கக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது: மக்களுக்குத்தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாவட்டத்தின் வளா்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நல்ல உள்ளங்களின் நிதி பங்களிப்புடன், அரசின் நிதியும் இணைத்து செயல்படுத்தப்படும் திட்டமே நமக்கு நாமே திட்டமாகும். ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு தொகையினை பங்களிப்பாக அளித்தால், மீதமுள்ள இரண்டு பங்கு தொகையினை அரசே வழங்கும். இதில், நீா்நிலைகள் புனரமைப்பு திட்டத்துக்கு மட்டும் திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத தொகையை பங்களிப்பாக அளிக்க வேண்டும்.
மக்கள் நலன் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபா்கள், தன்னாா்வ அமைப்பினா், பொதுத்துறை வங்கிகள் தங்களின் பங்களிப்பு நிதியை கொடுத்து உதவமுன்வர வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி குண்டாறு இணைப்பு திட்டம்) கவிதா, கரூா் மாநகராட்சி ஆணையா் ராமமூா்த்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பின் துணைத்தலைவா் வெங்கடேசன், அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், தொழில்நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.