கரூர்: ஆளுமைத் திறன் கொண்ட தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்றும் அதிமுகவில்தான் தொண்டனும் முதல்வர் ஆகலாம் என்றும் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி தெரிவித்தார்.
கரூர் பேருந்துநிலையம் பகுதியில் புதன்கிழமை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திமுகவில் மாநில விவசாய அணிச் செயலாளராக இருந்து அதிமுகவில் இணைந்த எம்.சின்னசாமி நன்றி தெரிவித்து பேசுகையில், அதிமுகவில் தொண்டனாக இருந்த நான் அங்கிருந்த ஒரு சக்தி காரணமாக வெளியேறியுள்ளேன். கருணாநிதிக்கு பிறகு இப்போது தலைவராக இருக்கும் ஸ்டாலினை சுயமாகச் செயல்பட விடாமல்
தடுக்கிறார்கள்.
கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தி முடிவுகளை தங்குதடையின்றி யார் அமல்படுத்துகிறார்களோ அவர்தான் உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள ஆளுமைத் திறன் கொண்டவர் என்றேன்.
அந்த இலக்கணத்திற்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதிமுகவில் தொண்டன் ஒருவன் முதல்வராகலாம் என்பதை நிரூபித்து காண்பித்தவர் எடப்பாடி பழனிசாமி. உங்களை பின்பற்றி நாங்கள் வருவோம். தொண்டனுக்கு தொண்டனாகிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதல்வராவார். ஏனென்றால் மக்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியின்போது மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, கரூர் தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.