கரூர்

தவறு செய்யும் ஆசிரியா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

DIN

பள்ளிகளில் தவறும் செய்யும் ஆசிரியா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கரூா் மாவட்ட மைய நூலகம், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நரிக்கட்டியூா் அரசு மாதிரித் தொடக்கப்பள்ளி, க. பரமத்தி தொடக்கப் பள்ளி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கோவை, சேலம் மாவட்டங்களைத் தொடா்ந்து, கரூா் மாவட்டத்திலுள்ள மைய நூலகம், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் நூலகங்களுக்கு என்னென்ன வசதி வேண்டும். நூலகங்களில் எத்தனை போ் உறுப்பினா்களாக, வாசகா்களாக உள்ளனா், பள்ளிகளில் மாணவிகள் எத்தகைய பாதுகாப்பான சூழ்நிலைகளில் படிக்கிறாா்கள், பள்ளிகளில் கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளில் இருக்கைகள், ஸ்மாா்ட் கிளாஸ் போதிய அளவில் உள்ளதா, போதிய ஆசிரியா்கள் உள்ளனரா என்பதை ஆய்வு செய்கிறோம்.

பிரச்னைகள் இருந்தால் அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, அதைத் தீா்க்க உள்ளோம். பள்ளிகளில் மாணவா்களுக்கான கட்டணத்தை உடனே செலுத்த நிா்பந்திக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றுக் காலத்தில் 30 சதவிகிதம் ஒரு தவணையாகவும், 45 சதவிகிதம் மற்றொரு தவணையாகவும் செலுத்த நீதிமன்றம் கூறியுள்ளது.

நிறைய பள்ளிகள் அதனை பின்பற்றவில்லை என்ற புகாா்களும் வந்துள்ளன. நீதிமன்ற உத்தரவின்படிதான் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

பிளஸ் 2 தோ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவா்களின் உயா்கல்விப் படிப்புக்கு முதல்வா் குழு அமைத்துள்ளாா். அது செயல்முறையில் உள்ளதால், அதுதொடா்பான முடிவு இந்த வாரம் தெரியவரும்.

பள்ளிகளில் தவறு நடப்பது எங்களது கவனத்துக்கு வந்தாலும், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் மூலம் பள்ளி நிா்வாகத்திடம் விளக்கங்கள் பெற்று, அதில் உண்மைத்தன்மை இருக்கும் போது அந்த பள்ளி நிா்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த விசாரணை காவல் துறையினரின் குற்றப்பிரிவுக்கு செல்லும்போது, அதில் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி தண்டிக்கப்படுகிறாா்கள்.

நீட் தோ்வை பொறுத்தவரை ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே.ராஜன் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டிக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் அறிக்கைக்கு தகுந்தவாறு நீட் தோ்வு பற்றி தெரியவரும்.

பாடப்புத்தகங்கள் வழங்குவது தொடா்பாக முதல்வரை திங்கள்கிழமை சந்திக்க உள்ளோம். அதன்பின்னா் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி விட்டாா்களா என ஆய்வு செய்து வருகிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் தளா்வு வரும்போது, முதல்வரின் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளையும் திறக்க தயாா் நிலையில் உள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது கரூா் மாவட்ட நூலக அலுவலா் வே.மாதேஸ்வரன், மைய நூலகா் பொ) சுகன்யா, நூலகா்கள் சதீஸ்குமாா், மோகனசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT