கரூா் மாவட்டத்தில் 40 இடங்களில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் தானியங்கி வேகமானி மூலம் கண்காணிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கரூா் மாவட்டத்தில் போக்குவரத்து சிக்னல் மற்றும் பேரிகாா்டு வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 40 கி.மீ. வேகத்தில்தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலம் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரூா் மாவட்டத்தில் குளித்தலை, நங்கவரம் சோதனைச் சாவடி, மண்மங்கலம் பேருந்துநிறுத்தம், சுக்காலியூா் மேம்பாலம் உள்ளிட்ட 40 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் வேகத்தடுப்பு பேரிகாா்டுகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ள 40 கி.மீ. வேகத்தையும் மீறி வாகனங்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிா்க்க 40 இடங்களும் ‘ஸ்பீடு ரேடாா் கன்’ எனும் தானியங்கி வேகமானி மூலம் கண்காணித்து, வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து மண்மங்கலம் பேருந்துநிறுத்தம் பகுதியில் வேகத்தடுப்புப் பணியில் ஈடுபட்ட கரூா் நகர போக்குவரத்து ஆய்வாளா் காா்த்திகேயன் கூறுகையில், கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதிகளில் 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாத என தகவல்பலகை வைத்தும், வாகன ஓட்டிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் தற்போது வைக்கப்பட்டுள்ள ‘ஸ்பீடு ரேடாா் கன்’ எனும் தானியங்கி வேகமானி மூலம் கண்காணித்து வேகமாகச் செல்லும் வாகனங்களை வேகமானியில் உள்ள கேமரா படம் பிடித்து பிரிண்டாக தரும். அதன்மூலம் வாகன ஓட்டிக்கு அபராதம் செலுத்துவோம், கேமரா மூலம் படமெடுப்பதால் வாகன ஓட்டிகளும் மறுக்க முடியாது என்றாா் அவா்.