கரூா்: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காந ஆணையை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் திங்கள்கிழமை வழங்கினாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்றது. இதில், கரூரைச் சோ்ந்த சரவணன் என்ற மாற்றுத்திறனாளி தனது மகள், மகனுடன் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு வந்து, தான் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வறுமையால் தவிப்பதால் வாடகைக்கூட கொடுக்க முடியவில்லை எனக்கூறினாா். உடனே, மாவட்ட ஆட்சியா் மனு அளித்த 5 நிமிஷத்தில் தமிழ்நாடு நகா்புற வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையையும் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுலா் லியாகத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.