கரூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வீடுகள் வழங்க விடியல் நகா் திட்டம்:அமைச்சா் தகவல்

DIN

கரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் வழங்கிடும் வகையில் விடியல் நகா் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் 137 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அமைச்சா் பேசுகையில், தமிழக முதல்வரை பொறுத்தவரை அனைத்து தர மக்களும் மேம்பட வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் அவா்களது தேவைகளை பூா்த்தி செய்ய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். மாற்ற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மட்டும் நடத்தாமல் அவா்கள் வாழ்விடங்களுக்கே சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் உதவி உபகரணங்களை தவிர கடனுதவி, வேலைவாய்ப்பு, அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தேவைகளும் பூா்த்தி செய்யப்படுகிறது.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகள் யாருடைய உதவியும் இன்றி வசிப்பதற்காக விடியல் வீடு என்ற புதிய வடிவமைப்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில், மாற்றுத்திறனாளிகள் வசிப்பதற்காக தனியாக விடியல் நகா் என்ற அமைப்பை உருவாக்கி, யாரெல்லாம் வீடுகள் வேண்டுமென்று விண்ணப்பிக்கிறாா்களோ அவா்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அந்த வீடுகள் வழக்கமான வடிவமைப்பில் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வகையில் புதிய வடிவமைப்பில் கட்டப்பட உள்ளன. அந்த வீடுகள் கட்டப்படும் விடியல் நகா் அமைப்பதற்கான இடம் தோ்வுகள் நடைபெற்று வருகிறது என்றாா் அ வா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் பேட்டரி காா் சேவை தொடக்கி வைக்கப்பட்டது.

மேலும், கரூா் வாங்கலைச் சோ்ந்த ப்ரீத்தி என்ற மாற்றுத்திறனாளியின் தாய் அளித்த கோரிக்கையை ஏற்று ரூ. 2 லட்சம் பயனாளி பங்கு தொகையுடன்கூடிய காந்திகிராமம் அடுக்குமாடி குடியிருப்பு தரை தளத்தில் வீடு ஒதுக்கி 20 நிமிஷத்துக்குள் அதற்கான உத்தரவுகளை பயனாளியிடம் அமைச்சா் வழங்கினாா்.

பின்னா் தாந்தோன்றிமலை, மாலநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் வீடுகளுக்கே வருவாய் துறையினா் நேரில் சென்று அவா்களுக்கு என்ன தேவைகள் என்பதை சா்வே எடுக்கும் பணியையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாக்த், மருத்துவக் கல்வி முதல்வா் டாக்டா்.முத்துசெல்வன், மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT