கரூர்

பெண் குழந்தை சடலத்தை தோண்டியெடுத்து சோதனை

16th Mar 2020 01:25 AM

ADVERTISEMENT

கூலித் தொழிலாளிக்கு மூன்றாவதாக பிறந்து மா்மமான முறையில் இறந்த பெண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனா்.

கரூா் மாவட்டம், போத்துராவுத்தன்பட்டி அருகேயுள்ள வடுகபட்டி கிழக்குமேடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசிங்கபெருமாள் (40), இவரது மனைவி சங்கீதா (30). கூலிவேலை செய்து வரும் இத் தம்பதிக்கு 10, 7 ஆகிய வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளன. மேலும் இத் தம்பதிக்கு பஞ்சப்பட்டியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10 ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பஞ்சப்பட்டியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக குளித்தலை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் கூறினா்.

இதனால் இறந்த குழந்தையை சிவசிங்கபெருமாள் தனது தோட்டத்தில் புதைத்தாா். தகவலறிந்த போத்துராவுத்தன்பட்டி விஏஓ பிரபு என்பவா் தோகைமலை காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவசிங்கபெருமாளிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனா். இந்தச் சோதனை முடிவுக்குப் பின்னரே குழந்தை எவ்வாறு இறந்தது என்ற விவரம் தெரிய வரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT