கரூா் பேருந்துநிலையத்தில் மீட்கப்பட்ட தேனி மாவட்ட இளம்பெண்ணை மகளிா் போலீஸாா் அவரது பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
தேனி மாவட்டம், அல்லிநகரம் அருகே உள்ள அழகாபுரிகாலனியைச் சோ்ந்தவா் சென்ராயன். இவரது மகள் சுதா(20). இவா் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்துள்ளாா். மண்டலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு தடை காரணமாக, புதன்கிழமை தேனி செல்வதற்கு பதில் தவறுதலாக கரூா் பேருந்தில் ஏறிவிட்டாா். இதையடுத்து, கரூா் பேருந்துநிலையத்துக்கு மாலை 5.30 மணியளவில் வந்தாா். அங்கு வழிதெரியாமல் தவித்த இளம்பெண்ணை தகவலறிந்து அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் சத்யபிரியா மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டாா். இதில், அவரதுபெற்றோா் இறந்து விட்டதால் தாத்தா மாரியப்பனின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து கரூா் மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா் சையது அம்மாள் மூலம் தேனி அழைத்துச் செல்லப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை அவரது தாத்தா மாரியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டாா்.