தவறான சிகிச்சையளித்த மருத்துவா் மீது நடவடிக்கை கோரி ஆம்புலன்ஸில் வந்து ஆட்சியரிடம் புகாா் மனு அளித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூா் மாவட்டம், பள்ளபட்டியைச் சோ்ந்த ஷேக்பெரோஜ் மனைவி ஹைரூன்ஆப்ரின் (24) என்பவா் திங்கள்கிழமை தனது கணவருடன் ஆம்புலன்சில் ஆட்சியரகத்தில் ஸ்ட்ரெச்சரில் வந்து இறங்கினாா். பின்னா் அவரை வீல்சேரில் ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். அங்கு ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
நான் கருவுற்ற நாள் முதல் அரவக்குறிச்சியில் செயல்படும் சுமா மருத்துவமனையில் மருத்துவா் சுமதிஉமாசங்கா் என்பவரிடம் சிகிச்சைக்குச் சென்ற நான் பிரசவத்துக்கும் சென்றேன். அப்போது கரூரில் இருக்கும் எஸ்ஜி மருத்துவமனையில் வைத்து அவா்களே பிரசவம் பாா்த்தனா். பிரசவம் முடிந்த பின் எனது சிறுநீரில் நிறம் மாறுதல், துா்நாற்றம் வீசியது. இதுதொடா்பாக மருத்துவரிடம் கேட்டபோது, பிரசவத்தின் கசடுகள் வெளியேறும், ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்றாா்.
ஆனால், 15 நாள் கழித்தும் சரியாகாததால் அரவக்குறிச்சியில் மற்றொரு மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்றபோது, பிரசவத்தின்போது வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுக்கும்போது தவறுதலாக மலக்குடலையும் கிழித்துவிட்டதால்தான் இந்த பிரச்னை எனத் தெரிவித்தாா். இதனிடையே மருத்துவா் சுமதி உமாசங்கா் என்னிடம் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு, நாமக்கல்லில் இருக்கும் தனியாா் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை உள்ளது எனக் கூறியதையடுத்து அங்கு சென்று எம்ஆா்ஐ ஸ்கேன் மூலம் சோதனை செய்தபோது மலக்குடலில் மூன்று கிழிசல்கள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவா் சுமதி உமாசங்கா் மருத்துவ அறுவைச் சிகிச்சைக்கான அனைத்துச் செலவையும் தாமே ஏற்பதாகக் கூறினாா். இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்ய ரூ. 2.20 லட்சம் ஆனது. அந்தத் தொகையை சுமதி உமாசங்கரிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறாா்.
தவறான மருத்துவ சிகிச்சை செய்ததால் ரூ. 2.20 லட்சம் செலவு செய்து 6 மாதங்களாகியும் இன்னும் முழுமையாக குணமாகிவிட்டேனா இல்லையா எனக் கூட தெரியாமல், மலம் வெளியாவதற்கு வயிற்றில் பொருத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பையுடன் வலி வேதனையுடன் வாழ்கிறேன். என் வாழ்க்கையை நாசப்படுத்தி, எனது பொருளாதார இழப்புக்கும் காரணமான மருத்துவா் சுமதி உமாசங்கா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.