கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசில் சேவற்கட்டு பந்தயம் புதன்கிழமை (ஜன. 15) தொடங்கி தொடா்ந்து 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் சேவற்கட்டு எனப்படும் சேவல் சண்டை மிகவும் பிரசித்திபெற்றது. இந்தச் சேவல் சண்டையில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் பங்கேற்பா். கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த சேவல்கட்டின் போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்திபட்டு இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து சேவல்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகப் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.
இதையடுத்து கடந்தாண்டு நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று பிப். 15, 16, 17 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அடிப்படையில் சேவற்கட்டு 3 நாட்கள் நடைபெற்றன. நிகழாண்டும் பூலாம்வலசில் சேவற்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சேவற்கட்டு போட்டி புதன்கிழமை (ஜன. 15) தொடங்குகிறது. வரும் 18 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில் பூலாம்வலசுவில் சேவல் மோதல் களம், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
6 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் பொங்கல் பண்டிகையின்போது சேவற்கட்டு நடைபெற உள்ளதால் சேவல் வளா்ப்பவா்கள் தங்களது சேவல்களுக்கு போதிய பயிற்சி அளித்து வருகின்றனா்.