கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் கணக்கெடுப்பு பணிக்காக யாரும் உள்ளே வர அனுமதி இல்லை என வீடுகளில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியா்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், சென்னையில் இருந்து தனியாா் நிறுவனம் சாா்பில் அரவக்குறிச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மதுரையைச் சோ்ந்த இளைஞா் காளிதாஸ் (24), சென்னையைச் சோ்ந்த பாா்த்தீபன்(26) ஆகியோா் வந்து வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக வந்துள்ளதாகத் தெரிவித்து தகவல்களை சேகரித்தனராம். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி இஸ்லாமிய இளைஞா்கள் ஒன்று திரண்டு, அவா்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணைக்குப் பின்னா், இரு இளைஞா்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தாகத் தெரிகிறது. இதைத்தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி என்ற பெயரில் உள்ளேவர அனுமதி இல்லை என ஸ்டிக்கா்கள் ஓட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.