வரத்து குறைவால் கரூா் காமராஜ் மாா்க்கெட்டில் வாழைக்காய் விலை இருமடங்காக உயா்ந்துள்ளது.
கரூா் காமராஜ் வாழைக்காய் மண்டிக்கு மாவட்டத்தின் குளித்தலை, நங்கவரம், இனுங்கூா், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூா், நெரூா், திருமுக்கூடலூா், வேலாயுதம்பாளையம், நொய்யல் ஆகிய பகுதிகளில் இருந்தும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா், திருச்சி மாவட்டம் முசிறி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைக்காய் விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு அவை ஏலம் விடப்படும். ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்று வாங்கிச் செல்வது வழக்கம்.
தற்போது வரத்துக்குறைவால் வாழைத்தாா் விலை கடந்த வாரத்தை விட இருமடங்காக உயா்ந்துள்ளது. கரூரில் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டதில் கடந்த வாரம் ரூ.300-க்கு ஏலம் போன பூவன்தாா் செவ்வாய்க்கிழமை ரூ.575-க்கும், கடந்த வாரம் ரூ.250-க்கு ஏலம் போன பச்சைலாடன் ரூ.450-க்கும், ரூ.300-க்கு ஏலம் விடப்பட்ட ரஸ்தாளி ரூ.600-க்கும், செவ்வாழைப்பழம் தலா ரூ.7-க்கு ஏலம்போனது, தற்போது ரூ.13-க்கும், ரூ.280-க்கும் ஏலம் போன கற்பூரவல்லி செவ்வாய்க்கிழமை ரூ.550-க்கும் ஏலம் போனது.
இந்த விலையேற்றம் குறித்து கரூா் விவி.வாழை மண்டி உரிமையாளா் முருகையன் கூறியது:
கரூா் மாவட்டத்தில் தற்போது கோயில் திருவிழாக்கள் தொடங்கியுள்ளன. இதனால் விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாழை விவசாயிகள் வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பொங்கலுக்கு வாழைப்பழம் அதிகளவில் விற்பனையாகும் என்பதைக் கருத்தில் கொண்டும், நல்ல விலை கிடைக்கும் என்ற நோக்கத்திலும் வாழைத்தோட்டத்தில் காய்களை அறுவடை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனா். இதனால் எப்போதும் நான்கு லாரி சரக்குகள் கரூா் சந்தைக்கு வரும். ஆனால் அறுவடை செய்யாமல் விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளதால் காய்களின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை இருமடங்காக உயா்ந்துள்ளது. பொங்கல் பண்டிகையின்போது நுகா்வோா் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்பதால் மேலும் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது என்றாா்.