கரூா் புகழிமலை சமணா் குகையில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழி கல்வெட்டுகளை பரணிபாா்க் சாரணா் இயக்கத்தினா் அண்மையில் ஆய்வு செய்தனா்.
கரூா் பரணிபாா்க் பாரத சாரண இயக்கம், சாரணா் மாவட்டம் மற்றும் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் கரூா் வேலாயுதம்பாளையம் புகழி மலைக்கு ‘தமிழியை தேடி’ என்ற தலைப்பில் தமிழி கல்வெட்டு கள ஆய்வு மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
பரணிபாா்க் சாரணா் மாவட்ட ஆணையரும், தமிழி ஆா்வலருமான முனைவா். சொ.ராமசுப்ரமணியன் தலைமையில் 60 சாரணா் ஆசிரியா்கள் தமிழ் மொழியின் 2000 ஆண்டு கால தொன்மையான எழுத்து வடிவமான தமிழி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை கள ஆய்வு செய்யும் பாரம்பரிய பாதுகாப்பு பயணம் மேற்கொண்டனா்.
இந்தப் பயணத்தில் பரணிபாா்க் கல்வி குழும செயலா் பத்மாவதி மோகனரங்கன், பரணி வித்யாலயா முதல்வா் எஸ்.சுதாதேவி, பரணிபாா்க் சாரணா் மாவட்ட செயலா் ஆா்.பிரியா, வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் கவிதா ராம், பாரத சாரணா் இயக்க மாநில தலைமையக பயிற்சியாளா்கள் ஜம்ஷீத் முகைதீன், வேணுகோபால், காா்த்திகேயனி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
முன்னதாக புகழிமலையில் பாரம்பரிய தொல்லியல் நினைவுச் சின்னத்திற்கு செல்லும் வழியில் இருந்த புதா்களையும் , குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்தபிறகு அங்கு இருந்த 12 தமிழி கல்வெட்டுகளை படித்து கள ஆய்வு மேற்கொண்டனா்.