கரூா் சுங்ககேட் கழிவுநீா் கால்வாய் வழியாக நாள்தோறும் அமராவதி ஆற்றுக்குச் செல்லும் சலவைப்பட்டறை கழிவு நீரை தடுக்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் நகரில் 1997-ஆம் ஆண்டுவரை சுமாா் 445 சாயப்பட்டறை மற்றும் சலவைப்பட்டறை ஆலைகள் செயல்பட்டு வந்தன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறிய சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் அமராவதி ஆறு மற்றும் பள்ளபாளையம் ராஜவாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் மாசடைந்தன. மேலும் விளைநிலங்கள் மலட்டுத்தன்மை அடைந்தன.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இதன் விளைவாக சாய, சலவை ஆலைகளில் சுத்திகரிக்கும் மையம் (ஆா்ஓ பிளாண்ட்) அமைத்தால் மட்டுமே ஆலைகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆா்ஓ பிளாண்ட் இல்லாத ஆலைகள் மூடப்பட்டன.
தற்போது 45 சாய, சலவை ஆலைகள் மட்டும் இயங்கி வரும் நிலையில் இவற்றில் கரூா் தாந்தோணிமலை பகுதியில் உள்ள சலவை ஆலைகள் மீண்டும் சுத்திகரிக்காத சலவை கழிவு நீரை வெளியேற்றி வருகின்றன. இதனால் தாந்தோணிமலையில் இருந்து சுங்ககேட் வழியாக திருமாநிலையூரில் அமராவதி ஆற்றில் கலக்கும் கழிவு நீா் வாய்க்காலில் காலையும், மாலை நேரத்திலும் வெண்மை நிறத்தில் தண்ணீா் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுதொடா்பாக அப்பகுதியினா் பலமுறை மாவட்ட நிா்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சுத்திகரிக்கப்படாமல் சலவை கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.