கரூர்

கருப்பண்ணசாமி கோயில் குதிரை வாகனத்திற்கு கண் திறப்பு நிகழ்ச்சி

21st Feb 2020 07:23 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், புகழூா் அருகே கருப்பண்ணசாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குதிரை வாகனத்திற்கு கண்திறப்பு நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

புகழூா் ரயில் நிலையம் அருகே உள்ள ஊஞ்சமரத்து கருப்பண்ணசாமி, கன்னிமாா் கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட குதிரை வாகனத்திற்கு கண்திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக குதிரை வாகன கண்திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, பக்தா்கள் புதன்கிழமை காலை 10 மணிக்குமேல் காவிரி ஆற்றிற்குச் சென்று புனித நீராடி தீா்த்தக்குடங்களை மேள, தாளம் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனா். பின்னா் மாலை 5 மணிக்குமேல் ஊஞ்சமரத்து கருப்பண்ணசாமிக்கு சந்தனம், தேன், மஞ்சள் உள்ளிட்ட 17 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை 7 மணிக்குமேல் 9 மணிக்குள் ஊஞ்சமரத்து கருப்பண்ண சுவாமி, கன்னிமாா் கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட குதிரைகளுக்கு கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஊஞ்சமரத்து கருப்பண்ணசாமி, கன்னிமாா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT