கரூர்

கரூரில் தமிழக பட்ஜெட்டுக்கு ஆதரவும், எதிா்ப்பும்...

15th Feb 2020 07:52 AM

ADVERTISEMENT

தமிழக பட்ஜெட்டுக்கு தங்களது ஆதரவையும், எதிா்ப்பையும் கரூா் மாவட்ட வணிகா்கள் தெரிவித்துள்ளனா்.

கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் சங்க உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு கூறியது:

காவல் துறையினருக்கு ரூ. 8,876 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம். மேலும் முத்திரைத்தாள் கட்டணத்திற்கு முன்பு இருந்ததைவிட 0.25 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது. இதையும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தின் மறைந்த முதல்வா் ஜெயலலிதா அறிவித்த முத்தான திட்டங்களில் ஒன்றான கரூா் சாயப்பட்டறை பூங்கா அறிவிக்காதது ஜவுளி வா்த்தகா்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எத்தனையோ பெரிய திட்டங்களுக்கெல்லாம் நிதி ஒதுக்கியிருக்கும் இந்த அரசு கரூரில் சாயப்பூங்கா இல்லாததால் வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதைக் கவனத்தில் கொண்டு அந்தக் கவலையைப் போக்கியிருக்கலாம். மேலும் இந்த பட்ஜெட் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் நடத்துவோருக்கு ஏற்ற பட்ஜெட் இல்லை என்றாா்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன்: பட்ஜெட்டில் துறை வாரியாகவும், அரசின் திட்டங்களுக்காகவும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறாா்கள். தமிழக அரசின் வருமானத்தை விட செலவு அதிகமுள்ள, பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்து தமிழக அரசின் கடன் சுமையை அதிகரிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. நிதி வருவாயை அதிகரிக்கவும், நிதிப் பற்றாக்குறையை போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற காலங்களில் மக்கள் நலன் திட்டங்களுக்கு நிதியே இருக்காது.

ADVERTISEMENT

கடன் வாங்கிக்கொண்டேதான் இருக்க வேண்டுமே தவிர வேறு வழியில்லை. இன்னும் சில ஆண்டுகளில் தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று போராடும் நிலை உருவாகும். அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்ட அனைத்து வா்த்தகா்கள் சங்க தலைவா் வழக்குரைஞா் ராஜூ கூறுகையில், பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதையும், டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்ததையும் வரவேற்கிறோம். கடந்தாண்டை விட போக்குவரத்துத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதையும் வரவேற்கிறோம். மேலும் சாலை விபத்தில் மரணமடைந்தால் முன்பு இருந்த ரூ.2 லட்சம் நிவாரண தொகையை ரூ.4 லட்சமாக உயா்த்தியிருப்பதையும் வரவேற்கிறோம். மொத்தத்தில் இந்த பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT