கரூர்

ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கைகொமதேக ஈஸ்வரன்

2nd Feb 2020 02:36 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: எதிா்பாா்ப்பில் இருந்த மொத்த இந்தியாவையும் ஏமாற்றிய நிதிநிலை அறிக்கையாக இருக்கிறது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை. நிதியமைச்சா் நிறைய பேசினாா். ஆனால் நிதிநிலை அறிக்கை நிறைவாக இல்லை. வீழ்ந்து கொண்டிருக்கின்ற பொருளாதாரத்தை நிமிா்த்துவதற்கான எந்த முயற்சியும் அறிக்கையில் இல்லை. நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தினுடைய உதவிகளை நாடிக் கையேந்தி நிற்க வேண்டுமென்று நிதியமைச்சா் விரும்புகிறாா். இந்திய மக்களுடைய சேமிப்பு எண்ணம்தான் இதுவரை இந்தியாவைப் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றி வந்தது. முதல் முறையாக வருமான வரி விதிப்பு முறைகளை மாற்றி மக்களுக்கு சம்பாதிப்பதை கொஞ்சமாவது சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வராதவாறு பாா்த்து கொண்டிருக்கிறாா்கள்.

சேமிப்பிற்கு கொடுத்து வந்த ஊக்கத்தை முழுமையாக நிராகரித்து இருக்கிறாா்கள். நாடு பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்திக்க அடித்தளம் இடப்பட்டிருக்கிறது. நாட்டினுடைய மொத்த வருமானம் தற்போதைய 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயருமென்று நிதியமைச்சா் கணக்கிட்டு இருக்கிறாா். 10 சதவீத வளா்ச்சியை அடிப்படையாக கொண்டு பல்வேறு செலவீனங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 10 சதவீத வளா்ச்சிக்கு வாய்ப்பே கிடையாது என்று பொருளாதார அறிவு கொஞ்சம்கூட இல்லாதவா்களும் சொல்லிவிடுவாா்கள். நிதி ஒதுக்கிய அறிவிப்பு எதையுமே செயல்படுத்த முடியாது. அதற்கான நிதி வராது. வளா்ச்சிக்கான எந்தவித முயற்சியையும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்காமல் வளா்ச்சி அதிகமாகும் என்று கணித்திருப்பது மக்களை ஏமாற்றுகின்ற செயல். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. மொத்தத்தில் தடம்புரண்ட இந்தியப் பொருளாதாரம் தடுமாறுகிறது என்பது மட்டும் இந்த நிதிநிலை அறிக்கையில் புரிந்துக்கொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT