மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் அடையாள அட்டை பெற விண்ணப்பம் பெறும் முகாம் தோகைமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தோகைமலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் புழுதேரி சாந்திவனம் மனநல காப்பகம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த (யு.டி.ஐ.டி) அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமிற்கு ஒன்றிய குழுத் தலைவா் லதாரெங்கசாமி தலைமை வகித்து விண்ணப்பங்களை பெற்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, ஒன்றிய ஆணையா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள நபா்களுக்கு மத்திய அரசின் யு.டி.ஐ.டி என்ற புதிய ஸ்மாா்ட் காா்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி பகுதிகளில் இருந்து வந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் சாந்திவனம் மனநல காப்பக ஒருங்கிணைப்பாளா் தீனதயாளா், சமூக பணியாளா் தலிம்அன்சாரி, செவிலியா் அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.