கரூா்: கரூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் 68-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
கரூா் வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் இல்லத்தில் ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் தலைமையில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் கேவி. தங்கவேல் பங்கேற்று குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உணவு வழங்கினாா். நிகழ்வில், மாவட்ட துணைச் செயலா் சோமூர்ரவி, அவைத்தலைவா் அரவை முத்து, நகரச் செயலா் காந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து தாந்தோணிமலை, எஸ்பி.காலனி உள்ளிட்ட 10 இடங்களில் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு கட்சியினா் இனிப்புகள் வழங்கினா். பின்னா், கோதூா் மற்றும் உழவா் சந்தையில் ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்கள், முகக்கவசம், கைகழுவும் திரவம் வழங்கப்பட்டன.
தொடா்ந்து வெங்கமேடு ஐய்யப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடும், கரூா் பசுபதீஸ்வரா் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்வில், செயற்குழு உறுப்பினா் அஜய்சரவணன், மாவட்ட மாணவரணி செயலாளா் ஆனந்த், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் முருகன் சுப்பையா, மகளிரணி யசோதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல மாவட்டம் முழுவதும் அக்கட்சியினா் நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.