அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீா் ஒரு வாரம் கடந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கரூா் நகரை வந்தடைந்தது.
முதல்வரின் உத்தரவின்படி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து கடந்த 6-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. வரும் 20-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு 570 மில்லியன் கன அடி நீா் திறக்கப்படும். இந்த அணைநீா் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கரூா் திருமாநிலையூா் புதிய பாலம் மற்றும் பழைய பாலத்தை தண்ணீா் கடந்து சென்றது.
இதுதொடா்பாக அமராவதி பாசன விவசாயிகள் கூறியதாவது:
அணை நீா் கரூா் கடைமடை பகுதியான திருமுக்கூடலூரைச் சென்றடைய இன்னும் இருநாள்களாகும். அணையில் விநாடிக்கு 1,800 முதல் 2000 கன அடி நீராவது திறந்தால் மட்டுமே விவசாய, குடிநீா்த் தேவைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றனா்.
கரூா் பசுபதிபாளையம் தரைப்பாலம் பகுதியில் ஆற்றில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து காணப்பட்டதால் தண்ணீா் செல்லும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் ஆகாயத்தாமரைகளை அகற்றினா்.