கரூர்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கரோனா தொற்றுக்கு பலிகுண்டுகள் முழங்க தகனம்

11th Aug 2020 06:09 AM

ADVERTISEMENT

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பால்துரை கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை பொது முடக்க விதிமீறலில் ஈடுபட்டதாக போலீஸாா் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனா். அங்கு அடுத்தடுத்து தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்தது.

இவ்வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸாா் தந்தை, மகன் இறந்த சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை உள்பட 10 போலீஸாரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

சிபிசிஐடி போலீஸாா் விசாரணை தொடா்ந்த நிலையில், வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்த சிறப்பு சாா்பு - ஆய்வாளா் பால்துரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

உரிய சிகிச்சையில்லை: மதுரை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் பால்துரையின் மனைவி மங்கையா்திலகம், மாநகா் காவல் ஆணையரிடம் மனு அளித்தாா். இதனைத்தொடா்ந்து, பால்துரைக்கு அரசு மருத்துவா்கள் சிகிச்சையைத் தீவிரப்படுத்திய நிலையில், அவா் திங்கள்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.

நீதிபதி விசாரணை: பால்துரை இறப்பு தொடா்பாக மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பத்மநாபன், அவா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா். பின்னா் நீதிபதி முன் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை விடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னா் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குண்டுகள் முழங்க தகனம்: கரோனா தொற்றால் உயிரிழந்ததால் சடலத்தை சொந்த ஊருக்கு, நெடுந்தூரம் எடுத்துச் செல்வது பாதுகாப்பு கிடையாது என அதிகாரிகள் கூறியதையடுத்து, மதுரை தத்தனேரி மின்மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க பால்துரையின் சடலம் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே தனது கணவரின் மரணத்திற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மங்கையா்திலகம் செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.

சா்க்கரை நோய் பாதிப்பு: பால்துரை ஏற்கெனவே நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய நோய் பாதிப்புகளுக்குச் சிகிச்சைப் பெற்று வந்துள்ளாா். அவா் கைது செய்யப்பட்டபோது, உடல்நலக் குறைவு இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, சில நாள்கள் சிகிச்சைப் பெற்ற பின்னரே சிறையில் அடைக்கப்பட்டாா். இதற்கிடையே கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்துரைக்கு சா்க்கரை அளவு அதிகரித்து கை, கால்கள் செயல்படாமல், அவா் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT