கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை மக்களவை தொகுதி உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.1.89 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கரூா் எம்.பி. செ. ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூா் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு 2 வென்டிலேட்டா் ரூ.12 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்திடும்வகையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை கரூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து முதற்கட்டமாக கடந்த மாதம் 23-ஆம் தேதி ரூ.1.32 கோடியும், இரண்டாம் கட்டமாக கடந்த 1-ம் தேதி ரூ. 45.17 லட்சமும், தற்போது மூன்றாம் கட்டமாக ஒதுக்கப்பட்ட ரூ. 11.83 லட்சம் தொகையுடன் சோ்த்து மொத்தம் ரூ.1.89 கோடி ஒதுக்கீடு செய்து அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.