தனது சொல்லாற்றலால் தமிழகத்தில் மட்டுமின்றி, உலகத் தலைவர்களையும் ஈர்த்தவர் அண்ணா என்றார் அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலர் வைகைச்செல்வன்.
கரூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
அண்ணா தனது சொல்லாற்றலால் தமிழகத்தில் மட்டுமின்றி உலகத்தலைவர்களையும் ஈர்த்தவர். சிறந்த ஆட்சியாளராகவும், கல்வியாளராகவும் விளங்கினார். தமிழகத்தை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். அவரது வழியில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தமிழகத்தை நல்வழிப்படுத்தினர். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி ஆட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், இன்று ஆட்சிக்கும், கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார்கள். அவர்களால் இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றார்.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை வகித்தார். கரூர் நகரச் செயலர் வை.நெடுஞ்செழியன் வரவேற்றார். மாவட்டத் துணைச் செயலர் பசுவைசிவசாமி, ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன், முன்னாள் தொகுதிச் செயலர் எஸ்.திருவிகா, எம்ஜிஆர்மன்ற துணைச் செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாவட்டச் செயலர் சாகுல் அமீது, மாவட்ட இளைஞரணிச் செயலர் வி.சி.கே.ஜெயராஜ், பாசறைச் செயலர் வி.வி.செந்தில்நாதன், தொழிற்சங்கச் செயலர் பொரணிகணேசன், பேரவைச் செயலர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வார்டு செயலர் முகமது இப்ராகிம் நன்றி கூறினார்.