கரூர்

குப்பாச்சிப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்

17th Sep 2019 08:52 AM

ADVERTISEMENT

குப்பாச்சிப்பட்டியில் இருந்து பாப்பக்காபட்டிக்கு காவிரிக் குடிநீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள்  திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவாயம் ஊராட்சியிலுள்ள குப்பாச்சிப்பட்டியில்  காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து குப்பாச்சிபட்டி கீழ, மேலகோவில்பட்டி  பகுதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக காவிரிக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கிருந்து பாப்பக்காப்பட்டி பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்க, ரூ.10.50 லட்சம் மதிப்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகம் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.  
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குளித்தலை காவல் துணைக் கண்காணிப்பாளர் கும்மராஜா, மணப்பாறை காவிரிக் குடிநீர்த் திட்ட உதவிச் செயற்பொறியாளர் ரவி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சோதனை ஓட்டத்துக்குத்தான் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பாச்சிப்பட்டியில்  குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால், பாப்பக்காப்பட்டி குடிநீர் இணைப்பு மாற்றப்பட்டு, வேறு நீரேற்று நிலையத்திலிருந்துகுடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT