கரூர்

குடிநீர் கேட்டு ஆட்சியரகம் வந்த மூன்று கிராம மக்கள்

10th Sep 2019 09:40 AM

ADVERTISEMENT

 

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மூன்று கிராமமக்கள் வந்திருந்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் சி. ராஜேந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த காணியாளம்பட்டி, வீரியப்பட்டி, மஞ்சாநாயக்கன்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன்  வந்து அவர்கள் வழங்கிய கோரிக்கை மனு:
எங்களுக்கு கடவூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டதால் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுகிறோம். மேலும் எங்கள் ஊரின் அருகே உள்ள சமத்துவபுரம் வரை காவிரிக்குடிநீர் குழாயில் வருகிறது. அந்த காவிரி குடிநீர் இணைப்பை எங்களது ஊருக்கும் இணைக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரில் தெரிவிளக்குகளும் சரியாக எரிவதில்லை. இதனால் இரவில் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.
பாமகவினர் கோரிக்கை மனு: மாவட்ட வருவாய் அலுவலரிடம் பாமக மேற்கு மாவட்டச் செயலர் சதீஸ்குமார் தலைமையில் அக்கட்சியினர் வழங்கிய மனுவில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி அதை ஓரிடத்தில் கொட்டிவைத்து, பின்னர் லாரியில் கடத்துகின்றனர். மேலும் வாங்கல் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மணல் திருட்டில் ஈடுபட்டு வருவோர் மீது குண்டர்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் என தெரிந்தும் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது அதிகாரிகளின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. எனவே மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 
தேங்காய் தொட்டி கரி ஆலை மீது நடவடிக்கை தேவை: ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில்,  அரவக்குறிச்சி அடுத்த மானார்பட்டியில் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆலை செயல்படுகிறது. அரசின் அனுமதி பெறாமல் நச்சுவாயுவை வெளியேற்றும் ஆலை மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT