கரூர்

மண்மங்கலம், புன்செய்புகழூரில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்

4th Sep 2019 08:45 AM

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம், வாங்கல் மற்றும் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஆகிய ஊராட்சிகளில்  செவ்வாய்க்கிழமை முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க் கூட்ட முகாம் நடைபெற்றது. 
முகாமில் பங்கேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று அவர் மேலும் பேசியது:  
கரூர் மாவட்டத்தில் 12,000 பயனாளிகளுக்கு மட்டுமே முதியோர், விதவை உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாதம் 29,000 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தகுதியுள்ள இதர பயனாளிகளுக்கும் உதவித்தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
கடந்த 8 ஆண்டுகளில், தமிழகத்தில் சுமார் 50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பணிபுரியும் மகளிர் ஒரு லட்சம் பேருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.   சுமார் ரூ.300 கோடியில் 1,000 படுக்கைகளுடன் 150 மாணவர்கள் பயிலும்வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரூ.13.20 கோடியில் பசுபதி பாளையம் மற்றும் குளத்துப்பாளையத்தில் குகைவழிப்பாதை, சுமார் ரூ.500 கோடியில் நஞ்சை புகழூர் பகுதியில் 1.15 டி.எம்.சி நீரை தேக்கும் கதவணை கட்டும் திட்டம், ரூ.22.12 கோடியில் கரூர் நகரப்பகுதிகளில் 20 சாலைகளை இணைத்து புறவழிச்சாலையை அடையும் அம்மா சாலை, சுமார் ரூ.145 கோடியில் கரூர், திருச்சி மாவட்டங்களை இணைக்கும் நெரூர் - உன்னியூர் பாலம் என எண்ணற்ற திட்டங்கள் கரூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றார். 
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் வட்டரா வளர்ச்சி அலுவலர் மனோகர்,  மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புன்செய்புகழூரில்... கரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் வேலாயுதம்பாளையம் அடுத்த புன்செய்புகழூர் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சுபசத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் கேசவன், டிஎன்பிஎல் பேரூர் செயலாளர்கள் எஸ்.சரவணன், ஆர்.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  பேரூர் அவைத்தலைவர் சின்னத்தம்பி வரவேற்றார். 
இதில் சிறப்பு விருந்தினராக  திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் பங்கேற்று புன்செய்புகழூர் பேரூராட்சிக்குட்பட்ட  பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமில், முன்னாள் துணைத்தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கிழக்கு தவிட்டுப்பாளையத்தில்... முன்னதாக புஞ்சைத் தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு தவிட்டுப்பாளையத்தில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாமில்  அவர் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். முகாமில் புகழூர் வருவாய் வட்டாட்சியர் எம்.ராஜசேகரன், தோட்டக்குறிச்சி முன்னாள் தலைவர் ரேணுகாமோகன்ராஜ், செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT