கரூர்

காவிரி, அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

4th Sep 2019 08:44 AM

ADVERTISEMENT

கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி, அமராவதி ஆறுகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் கரூர், வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்து முன்னணி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் 294 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. 
இந்த சிலைகளுக்கு திங்கள்கிழமை மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பெண்கள் குத்துவிளக்கேற்றியும், கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை படையலிட்டும் வழங்கினர். சில இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காவல் துறையினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி மட்டுமே விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை க.பரமத்தி, அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த  100-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அமராவதி ஆற்றில் ராஜபுரம் என்ற இடத்தில் விஜர்சனம் செய்யப்பட்டன. இதேபோல வேலாயுதம்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 50 சிலைகள் காவிரி ஆற்றில் தவுட்டுப்பாளையம் என்ற இடத்திலும் கரைக்கப்பட்டன.  
முன்னதாக வேலாயுதம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராமகோபாலன் பங்கேற்றுப் பேசினார். அப்போது ஹிந்து கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார். கரூரில் நகர்ப் பகுதிகள் மற்றும் தாந்தோணிமலை, வெங்கமேடு, சுங்ககேட், ஆண்டாங்கோவில், வெள்ளியணை, காந்திகிராமம், வையாபுரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டு சிலைகள் அனைத்தும் கரூர் 80 அடி சாலைக்கு கொண்டுவரப்பட்டது. 
அங்கு பாஜக திருச்சி கோட்ட இணை பொறுப்பாளர் கே.சிவசாமி தலைமையில் இந்துமுன்னணி சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. சிலைகள் 80 அடி சாலை, ஜவஹர் பஜார், ஐந்து ரோடு, பஞ்சமாதேவி வழியாக வாங்கல் மற்றும் நெரூர் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் பாஜக நகரத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT