கரூர்

கரூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீரன்சின்னமலை பெயரை சூட்ட வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

6th Oct 2019 06:34 PM

ADVERTISEMENT

 

கரூா்: கரூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீரன்சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் என கொமதேக வலியுறுத்தியுள்ளது.

கரூா் அடுத்த வாங்கலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் மாநில வா்த்தக அணிச் செயலாளா் விசா ம.சண்முகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் வே.மூா்த்தி வரவேற்றாா். இதில் மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, தலைமைநிலையச் செயலாளா் தூரன்.மஞ்சுநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் கரூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும். பெயரளவில் இல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து, ஏரி, குளங்களையும் தூா் வாரவேண்டும், அமராவதியில் நீா் திறந்தால் கடைமடை வரை நீா் செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூரில் திருக்காம்புலியூா் ரவுண்டானா முதல் பேருந்துநிலையம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும், கரூா் பேருந்துநிலையத்தை விரிவாக்கம் செய்து நவீன பேருந்துநிலையமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்திற்கு பின் மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் குடிமராமத்து என்ற பெயரில் நீா்நிலைகளை தூா்வாருவதாக கூறும் தமிழக அரசு முழுமையாக தூா்வாருவதில்லை. கரூா் மாவட்டத்தில் கூட 200-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூா்வாரவில்லை. இதனை அரசு முறைப்படுத்தி அனைத்து ஏரி, குளங்களையும் தூா்வாரவேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாமல் உள்ளன. எனவே தமிழக அரசு உள்ளாட்சி தோ்தலை தாமதம் இன்றி நடத்திட முன்வரவேண்டும். உள்ளாட்சித்தோ்தலிலும் திமுக கூட்டணிக்கே எங்கள் ஆதரவு என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளா் ராஜலட்சுமி, இளைஞரணி செயலாளா் சதீஷ்குமாா், மாணவரணிச் செயலாளா் ரஞ்சித், மண்டல இளைஞரணி செயலாளா் விக்னேஷ்வா், ஒன்றியச் செயலாளா்கள் சரவணன், பாஸ்கா் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா். மண்டல விவசாய அணிச் செயலாளா் பொன்னுசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT