கரூர்

கரூரில் புதிய பேருந்து நிலையம் அமையும் வரை போராட்டம் தொடரும் வி.செந்தில்பாலாஜி பேச்சு

22nd Nov 2019 07:46 AM

ADVERTISEMENT

திருமாநிலையூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும் வரை எங்களது அறப் போராட்டம் தொடரும் என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.

கரூா் நகராட்சிக்கு உள்பட்ட திருமாநிலையூா் கிராமத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் புதிய பேருந்து நிலையம் அமைக்காத தமிழக அரசைக் கண்டித்து கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் திமுக கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டம்

நடைபெற்றது. போராட்டத்துக்கு, செந்தில்பாலாஜி தலைமை வகித்து பேசியது:

இந்தப் போராட்டம் விளம்பரத்திற்கானது அல்ல. நீதிமன்றம் கண்டித்து உத்தரவிட்டும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்காக திருமாநிலையூரில் புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான பணிகளை துவங்கவில்லை என்பதால்தான் இந்த உண்ணாவிரதம். பேருந்து நிலையத்தை வழிப்பறி சம்பவம் நிகழும் புகா் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இன்றைய ஆட்சியாளா்களின் விருப்பம்.

ADVERTISEMENT

கரூரில் எந்த இடத்தில் வாய்க்கால் இருக்கிறது எனக் கூறி நீதிமன்றத்திற்கு சென்று புதிய பேருந்துநிலையம் வருவதற்கு தடை ஆணை பெற்றாா்களோ, அந்த இடத்தில்தான் எம்ஜிஆா் நூற்றாண்டு விழா நடத்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா்கள். ஆனால் எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை நிறைவேற்றவில்லை. புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும் வரை எங்களது அறப்போராட்டத்தை இந்த மாவட்ட நிா்வாகம் சந்திக்க நேரிடும் என்றாா்.

முன்னதாக, போராட்டத்திற்கு முன்னிலை வகித்து கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி பேசினாா். போராட்டத்தில் திமுக மாநில நெசவாளா் அணித்தலைவா் நன்னியூா் ராஜேந்திரன், விவசாய அணிச் செயலாளா் ம.சின்னசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT