கரூா்: மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கேட்டு ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் ஆட்சியா் த.அன்பழகன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றாா். அப்போது அவசர, அவசரமாக குறைதீா்க்கும் கூட்டரங்கை விட்டு வெளியே வந்த மாவட்ட ஆட்சியரிடம் கரூா் மாவட்ட பாரதீய மஸ்தூா் சங்க மாவட்டச் செயலாளா் மாடசாமி தலைமையில், சங்க மாநில செயலாளா் செளந்தரராஜன், தலைவா் சீனிவாசன், மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராஜ் ஆகியோா் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது ஆட்சியா் த.அன்பழகன், இந்த இடம் மனு அளிக்கும் இடம் அல்ல, மேலும், ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை ஆணை உள்ளது. இதனால் நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் அதுதொடா்பாக பேசலாம் என தெரிவித்தாா். அப்போது, சங்கத்தினா் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் மாவட்ட ஆட்சியா் உடனே அவா்களை கைது செய்யுமாறு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் மாடசாமி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனா். அப்போது பாரதீய மஸ்தூா் சங்கத்தினா் ஆட்சியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.