யார் நல்லது செய்வார்கள் என சிந்தித்து வாக்களியுங்கள்: திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேச்சு

யார் நமக்கு நல்லது செய்வார்கள் எனப் பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி.

யார் நமக்கு நல்லது செய்வார்கள் எனப் பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவர் மேலும் பேசியது:
2016-ல் இதே தொகுதியில் நீங்கள் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்தத் தொகுதி மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு எதையும் எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படும் முதல்வரை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததற்கு என்னுடைய பதவியைப் பறித்துவிட்டார்கள்.   பதவியை பறிக்கும் அளவுக்கு நான் என்ன பாவம் செய்தேன்?
தூத்துக்குடி படுகொலை,  பொள்ளாச்சி சம்பவம் ஆகியவைதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகள்.  இங்கு தேர்வு செய்யப்பட்ட தம்பிதுரையும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கல்விக்கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் ரத்து போன்ற பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அறிவித்துள்ளார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தும் கிடைக்க உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். 
மே 23-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராவார். அதன்பிறகு இந்தத் தொகுதிக்குட்பட்ட 25,000 பேருக்கு அவரவர் பகுதியிலேயே தலா மூன்று சென்ட் வீட்டு மனை இலவசமாக வழங்கப்படும். நமக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள் என்றார் அவர்.
கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் ம. சின்னசாமி, ஒன்றியச் செயலர் கே. கருணாநிதி, மதிமுக மாவட்டச் செயலர் கபினிசிதம்பரம் மற்றும் பட்டியலின விடுதலைப் பேரவைத் தலைவர் ஆனந்தராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com