கரூர்

சேங்கலில் குடிநீர் கோரி கிராம மக்கள் மறியல்

29th Jun 2019 09:38 AM

ADVERTISEMENT

சேங்கலில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் பஞ்சப்பட்டி-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே சேங்கல் கிராமம் உள்ளது. இங்குள்ள மேலபண்ணைக்களம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு சேங்கல் ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதமாகவே குடிநீர் போதியளவில் வழங்கப்படவில்லையாம். 
இதுதொடர்பாக ஊராட்சி எழுத்தரிடம் கேட்டபோது, ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டதாகவும், இனி புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தால்தான் குடிநீர் வழங்க முடியும் எனவும் கூறினாராம். 
இதனிடையே குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட மக்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்துவந்த நிலையில் தற்போது தோட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குடிநீர் எடுக்க வரக்கூடாது எனக்கூறியதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் தங்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை கோரி சேங்கல் கடைவீதியில் வெள்ளிக்கிழமை காலை பஞ்சப்பட்டி-உப்பிடமங்கலம் சாலையில்  காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் மாயனூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது குடிநீர் பிரச்னயை நிரந்தரமாக இரண்டொரு நாளில் தீர்த்து வைப்பதாக அவர்கள் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: கிராமமக்களின் திடீர் மறியலால் பஞ்சப்பட்டி-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதனால் காலையில் கரூர் நகர் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT