கரூர்

மனிதக் கடத்தல் தண்டனைக்குரிய குற்றம்: மாவட்ட முதன்மை நீதிபதி

31st Jul 2019 10:16 AM

ADVERTISEMENT

பிறரின் அறியாமையைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய வகையிலான மனிதக் கடத்தல் செயல்கள் தண்டனைக்குரிய குற்றம் என்றார் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம்.கிறிஸ்டோபர்.
கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக மனிதக் கடத்தல் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஊர்வலத்தை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:  
இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு மனித உரிமை குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டது. மனித உரிமை மீறல் என்பது எந்தக் காலத்திலும், எந்த விதத்திலும் இருக்கக் கூடாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாக முன்மொழியப்பட்டது. மனித உரிமை மீறலின் முக்கியமான ஒன்று மனிதக் கடத்தல் ஆகும். 
முன்பெல்லாம் அடிமைகளை விலைக்கு வாங்கி விற்பது என்பது உலகம் முழுவதும் இருந்தது. யார் தன்னை வாங்குகிறார்களோ அவர்களுக்கு முழுநேரமும் வேலை செய்யக்கூடிய அடிமை முறை என்பது பின்னர் வரப்பெற்ற சட்ட திட்டங்களால் ஒழிக்கப்பட்டது. 
ஆனால் அந்த அணுகுமுறை தற்போது வேறு பாதையில் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. கடன் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன், நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்பன போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்று சொற்ப கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்குவதும் மனிதக் கடத்தலின் ஒரு வகை பரிணாமம் தான். 
இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும்தான். பிறரின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ள கூடிய வகையிலான மனித கடத்தல் செயல்கள் தண்டனைக்குரிய குற்றம்தான் என்றார். 
தொடர்ந்து மனித கடத்தல் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வாசிக்க கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றனர். இதையடுத்து மனிதக் கடத்தல் தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தொடங்கி எம்.கிறிஸ்டோபர் நீதிமன்ற வளாகத்தில் துவக்கி வைத்தார். 
ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்று தான்தோன்றிமலை அரசுக் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.  நிகழ்ச்சியில், சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகன்ராம், குடும்பநல நீதிமன்ற நீதிபதி பிருந்தா கேசவாச்சாரி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிகலா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிசி.கோபிநாத், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.மோகன்ராஜ், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி சி.விஜய் கார்த்திக் மற்றும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT