கரூர்

பிளக்ஸ் பேனர்களை அகற்றாவிட்டால் வழக்கு தொடருவேன்: டிராபிக் ராமசாமி

31st Jul 2019 10:15 AM

ADVERTISEMENT

கரூரில் அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்க வழக்குத் தொடருவேன் என்றார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு கரூர் வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா மற்றும் கரூர் கோவை சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை பார்த்தவுடன் அவற்றைத் தனது செல்பேசியில் விடியோவாக பதிவிட்டார்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை ஏன் அகற்ற வில்லை என்று கேள்வி எழுப்பினார்.  அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் திருப்தி அளிக்காததால் சம்பந்தப்பட்ட பிளக்ஸ் பேனரை அகற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டார். 
அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அவருடன் தங்களது செல்பேசியில் சுயபடம் எடுத்துக்கொண்டனர். மேலும் ஆளும் கட்சியினர் தரப்பிலும்,  வர்த்தக நிறுவனங்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை கிழிக்கும் பணியிலும் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர்களை வைக்கக் கூடாது என வரும் டிச. 19-ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளேன். எனவே புதன்கிழமைக்குள்  இந்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT