கரூர்

"தன்னம்பிக்கை, விடா முயற்சியே வெற்றி பெற வழிவகுக்கும்'

29th Jul 2019 10:34 AM

ADVERTISEMENT

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற எண்ணமே  தேர்வில் வெற்றி பெற வழிவகுக்கும் என்றார்  பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்.
 கரூர் மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்  போட்டித் தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை  சனிக்கிழமை பார்வையிட்ட அவர்,  தேர்வாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி மேலும் பேசியது:
இந்த நல்ல வாய்ப்பை போட்டித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பட்டப்படிப்பு படித்தால் மட்டும் போதாது. மாறாக போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெற வேண்டும். 
பல வீடுகளில் பெண்களுக்கு படிக்கும் சூழலே இல்லாத நிலையில், இதுபோன்ற நூலக வசதியைப் பயன்படுத்தி அரசுப் பதவிகளைப் பெற வேண்டும்.   பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தராது.  நமது மனம் மட்டுமே மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது. மகிழ்ச்சி, வருத்தம், துன்பம் மாறி மாறி வரும். அதை சமமாகப் பார்க்கும் மனநிலை வரவேண்டும். 
 போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் இக்காலங்களில் பல்வேறு புறச்சூழ்நிலைகள் நமக்கு சவாலாக இருக்கும். அதற்கு இடமளிக்கக்கூடாது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எதுவும் நம்மால் முடியும் என்ற எண்ணமே தேர்வில் வெற்றிபெற வழிவகுக்கும். முயற்சியும், போதிய பயிற்சியும் இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெறமுடியும் என்றார்.
முன்னதாக வாசகர் வட்டத்தலைவர் தீபம் உ.சங்கர் வரவேற்றார். மாவட்ட மைய நூலக நல்நூலகர் செ.செ.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.  கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன்,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் கரூர் சிவராமன், குளித்தலை  கபீர், எழுத்தாளர் மாதவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இனாம்கரூர் கிளை நூலகர் ம.மோகனசுந்தரம் நன்றி கூறினார்.
 பட்டதாரி ஆசிரியர் ரெ.முரளி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.போட்டித் தேர்வாளர்கள், வாசகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT