கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே நள்ளிரவில் ரயிலை நிறுத்திய ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜோதிடர் வன்னிகுமார்(50). இவர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மல்லீசுவரன் கோயில் அருகே தங்கி ஜோதிடம் கூறி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு எரியோடு பகுதியிலிருந்து இவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் நேரிடையாக வீட்டுக்கு வந்து ஜோதிடம் கூற வேண்டும், நீங்கள் கேட்கும் பணத்தைத் தருகிறோம் எனக்கூறி அழைத்துள்ளனர்.
இதனை நம்பி தனது காரில் எரியோடு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு கும்பல், அவர் வெள்ளியணை அருகே இருள்நிறைந்த பகுதிக்கு வந்தவுடன் அவரை அடித்து உதைத்து, அவரிடமிருந்த தங்க நகைகள், பணம் மற்றும் காரைப் பறித்து தப்பிச் சென்றனர்.
இதனால் செய்வது அறியாது திகைத்த வன்னிகுமார் வெள்ளியணை ரயில்நிலையம் அருகே காட்டுப்பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, நள்ளிரவு 11 மணியளவில் அவ்வழியே வந்த தூத்துக்குடி-மைசூர் ரயிலை தனது வேட்டியைக் காண்பித்து நிறுத்தியுளளர்.
இதையடுத்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி, அவரை ஏற்றிக்கொண்டு வெள்ளியணை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டுச் சென்றனர். அங்கு பணியிலிருந்த கரூர் ரயில்வே பாதுகாப்புபடை போலீஸார், ரயில்வே விதிமுறைகளை மீறியதாக வன்னிகுமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.