கரூர்

குறைதீர் முகாம் மனுக்கள் மீது காலதாமதம் கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்

16th Jul 2019 09:27 AM

ADVERTISEMENT

குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது எந்தவித காலதாமதத்துக்கும் இடம் அளிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் த. அன்பழகன் அறிவுறுத்தினார்.
கரூர் மாவட்ட ஆட்சியரக்தில், திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்டு, கரூர் மாவட்டத்தின் பல்வேறு துறைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ள மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, அமைச்சர்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வரப்பெறும் மனுக்கள், குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள், சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பெறப்படும் மனுக்கள், அம்மா திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் என பல்வேறு நிலைகளில் மனுக்கள் பெறப்படுகின்றன. 
இந்த மனுக்கள் ஒவ்வொன்றும் மனுதாரரின் உணர்வின் வெளிப்பாடாகும். கோரிக்கைகளை கவனமாக பரிசீலனை செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தவித காலதாமதத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது. குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மனுதாரர்களுக்கு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும். மனுக்கள் மீதான நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
நலத்திட்ட உதவிகள்: மாற்றுத் திறனாளி மாணவர்கள் 10 பேருக்கு காதொலி கருவிகளும், 2 பேருக்கு நவீன மடக்கு குச்சி, ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. வருவாய்த்துறை மூலம் இருவருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்து. தொழில்நெறி வழிகாட்டி திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. பல்வேறு கோரிக்கைகளுடன் 376 மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அலுவலர்களிடம் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன. இந்த முகாமில், துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுபிரியா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் லீலாவதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கணேஷ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT