மரம் இல்லாமல் மனித வாழ்வு இல்லை என்றார் ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை தலைவர் பாரி.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பரணிநகர் பகுதியில் லைப் ட்ரீ பவுண்டேசன் சார்பில் "இயற்கையை நோக்கி ஊர் கூடி மரம் நடுவோம் என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது: புத்திக் கூர்மை இல்லாத மனிதனைப் பார்த்து ஏன் மரம் போல் நிற்கிறாய் என தமிழிலே ஒரு தவறான பழமொழி கூறுவதை நாம் பார்க்கலாம். ஆனால், மரம் இல்லாவிட்டால் மனிதன் இல்லை. அப்படி மரத்திற்கு நிகராக மனிதனையும், மனிதனுக்கு நிகராக மரத்தையும் கூறும் வேளையில், ஒரு மரம் பிறந்து வளர்ந்து இறக்கும் வரையில் மனித குலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் போது,
புத்திக் கூர்மை இல்லாத மனிதனைப் பார்த்து மரம் போல் நிற்கிறாயே எனக் கூறி மரத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் சொல்லை இனி யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றார்.
லைப் ட்ரீ பவுன்டேசன் நிறுவனர் எம்.கே.ராஜேந்திரன் வரவேற்றார். அட்லஸ் எக்ஸ்போர்ட் தலைவர் எம்.நாச்சிமுத்து, அரவிந்த் டிரேடர்ஸ் வி.கே.தங்கவேல், ஜே.டெக்ஸ் தங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் அசோக் குமார், விகேஏ தொழில் நிறுவனங்களின் தலைவர் விகேஏ.கருப்பண்ணன், கரூர் டெக்ஸ் சிட்டியின் ஏ.ஜே.சூர்யநாராயணன், கரூர் சிஐஐ தலைவர் முருகானந்தம், கரூர் வீவிங் நிட்டிங் ஓனர்ஸ் அசோசியேசன் தலைவர் அப்னா ஆர்.தனபதி, முன்னாள் எம்எல்ஏ மலையப்பசுவாமி, இயற்கை விவசாயி ஏ டெக்ஸ் கணேசன், கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் அன்பொளி ஆர்.காளியப்பன், பைனான்ஸ் அசோசியேசன் தலைவர் வித்யாசாகர் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.