கரூர்

உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி

12th Jul 2019 07:23 AM

ADVERTISEMENT

மக்கள் தொகை பெருக்கத்தின் அபாயத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11 உலக மக்கள் தொகை தினமாக ஐ.நா சபையால் அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து பேரணி  திண்டுக்கல் சாலை வழியாகச் சென்று அரசு கலைக் கல்லூரியில் முடிவுற்றது. இதில் அரசு கலைக்கல்லூரி, சக்தி செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர். தொடர்ந்து, தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற மக்கள்தொகை தினக் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பேசியது: 
பொதுமக்களிடையே மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான குடும்பநல முறைகளை பின்பற்ற அறிவுறுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இந்த உலக மக்கள்தொகை தினம் அனுசரிப்பதன் நோக்கமாகும். நிகழாண்டு "தாய்-சேய் நலத்தின் பாதுகாப்பு, திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு'  என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  பெண்களின் குடும்ப சுமையைக் குறைத்து நாடு நலம் பெற சிறு குடும்ப நெறியை பின்பற்றி பெருகி வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்ணுக்கு கல்வி அவசியம்.  குடும்பத்தை அளவோடு வைத்துக்கொள்ள பெண் கல்வி,  குடும்ப பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் குழந்தை வளர்ப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு உள்ளது என்றார்.  முன்னதாக உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கினார். 
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி,  அரசு கலைக் கல்லூர் (பொ) ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் (கரூர்) சந்தியா,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT