கரூர்

"தேர்வு செய்து படித்தால் போட்டித் தேர்வில் வெல்லலாம்'

6th Jul 2019 07:05 AM

ADVERTISEMENT

போட்டித்தேர்வில் கண்டதையும் படிப்பதை விட படிக்க வேண்டியதை தேர்வு செய்து படிப்பதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து மேலும் அவர் பேசியது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி -4  தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது உங்கள் அனைவருக்கும் கிடைத்த பெரிய வாய்ப்பாகும். 
போட்டித்தேர்வில் வியர்வை சிந்திப் படிப்பதை விட வெற்றிபெறுவதற்கான வழிமுறையை கண்டுபிடித்து பயில வேண்டும். 24 மணி நேரமும் முனிவர் போல தவவாழ்க்கை மேற்கொண்டு கஷ்டப்பட்டு படித்தால் வெற்றி எளிதில் கிடைக்கும். இங்கு பட்டம் பெறுவதற்கான படிப்பை பயில வரவில்லை. மாறாக, வேலைவாங்க வேண்டும் என்ற சிந்தனையோடு வந்துள்ளீர்கள். கண்டதை படிப்பதை விட கண்டெடுத்து படிப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். போட்டித்தேர்வு என்பது தற்காலிக முதலீடு அல்ல. 62 ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யும் முதலீடு. தேர்வில் வெற்றிபெற்றால் அரசு ஊழியராகி நிரந்தரப் பணியைப் பெறலாம். 
இது நான் கூறும் அறிவுரை அல்ல, வெற்றிபெறுவதற்கான நெறிமுறை என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் க. விஜயா, மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகர் ப. மணிமேகலை மற்றும் போட்டித்தேர்வாளர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாவட்ட மைய நூலகத்தின் நூலகர் செ. செ.சிவக்குமார் ஒருங்கிணைப்பு செய்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT