மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை பெருந்திரள் முறையீடு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸிவெண்ணிலா ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபடுவதாகவும், இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு. சுப்ரமணியன், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில துணைத் தலைவர் நல்லம்மாள், மாவட்டச் செயலர் செல்வராணி, செயலர் கார்த்திக், பெருளாளர் தனலட்சுமி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர்(பொ) ஆ. செல்வம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் குமரவேல், தமிழ்செல்வி, பார்த்தீபன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் அன்பரசு நிறைவுரையாற்றினார். செயலர் என். ஜனார்த்தனன் வரவேற்றார். மாவட்டச் செயலர் சக்திவேல் நன்றி கூறினார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அரசு ஊழியர்கள், தமிழ்நாடு செவிலியர் சங்கத்தினர் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.