கரூர்

தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

2nd Jul 2019 09:17 AM

ADVERTISEMENT

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஆட்சியர் த.அன்பழகன் பாராட்டினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 314 மனுக்கள் வரப்பெற்றன. அந்த மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முகாமில், இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 12, 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தங்கம் வென்ற மாணவர் ரித்தின் பிரனவ்,  சர்வதேச யோகா தினத்தையொட்டி புது தில்லியில் நடைபெற்ற யோகா ஒலிம்பியா போட்டியில் பங்கேற்று, தமிழகத்திற்காக தங்கம் பெற்ற மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளி மாணவர் ஜனார்த்தனன் மற்றும் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபர்னா ஸ்ரீ, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவர்கள் தருண், கிருஷ்ணன், சுரேஷ், ஸ்ரீசாந்த், பிரசாந்த், யுகேஷ், ஹரிஸ் குமார் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். 
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கண் பார்வையற்ற பயனாளிக்கு நவீன அதிரும் மடக்கு குச்சியையும், ஒரு பயனாளிக்கு தாங்கு கட்டைகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு விலையில்லா எரிவாயு இணைப்பினையும், இருவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவையும்  ஆட்சியர் வழங்கினார். 
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கணேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட ஆதி திராவிடர்நல அலுவலர் லீலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


பல்வேறு தரப்பினர் அளித்த மனுக்கள் விவரம்:
கடவூரை அடுத்த டி. இடையப்பட்டி எழுவக்கரியூர் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 
வேட்டமங்கலம், மறவாபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள்  அளித்த மனுவில், நொய்யல் சாயக்கழிவு நீர் கலக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.  குளித்தலை ஒன்றியம், அய்யர்மலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், சிவாயம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நிகழாண்டில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் 60 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றிவருகிறார். மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT